Saturday, August 30, 2008

நாரைக்கு முக்தி அளித்த படலம்


உலகில் கண் இருக்கும் எவ்வுயிர்க்கும் நற்கதி தரும் தெய்வமாம் ஈசனை தியானித்தால், எக்கதி விருப்பமோ, அக்கதி அவன் அருள் தருவான்!
உலகின் பழிக்கு அஞ்சி, அப்பழி இனி உலகில் ஏற்படாவண்ணம் வாழச்செய்யும் ஜீவன் உலகில் மிகவும் அரிதிலும் அரிது. அப்பேற்பட்ட ஒரு ஜீவன் தான் தாமரை வண்ண கால்களும், நிலா நிறம் கொண்ட சிறகுகளை பெற்ற ஒரு நாரை.

மதுரையம்பதியிலே ஒரு வனம், அந்த வனத்தில் குளிர் தருவும், தரு தரும் நிழலும், நிழலருகில் இருக்கும் சென்பக மலர் வீசும் அச்சோ என வழங்கப்பெறும் குளிரோடையும், காணும் இனத்தையெல்லாம் ஈர்த்தது. ரிஷி முனிகள் அக்குளக்கரையில் குடிலமைத்து தவம் செய்தனர், புழு பூச்சிகள் அருகில் இருந்த மரங்களை நாடியும், மரங்கள் குளத்திலிருக்கும் நீர்நிலைகளை நாடியும், மீன்கள், நீர்வாழ் உயிரினங்கள், பறவையினங்கள் என பல இனங்கள் தம்மோடு கூடி அவ்வனத்தில் வாழ்ந்து வந்தன.
முனிவர்கள் தவத்தாலும் கொல்லாமை – புலால் உண்ணாமை என்பது ஏனோ ஓர் இளநாரைக்கும் தொற்றியது. தவசீலர்கள் நீராடும் சமயம் அவர் உடல் தீண்டும் சுகம் பெற்ற கயலினங்கள் எத்தவம் செய்தனவோ அவை உண்டு தாம் எப்பிறவி எடுக்க வேண்டுமோ என நாரை அஞ்சத் தொடங்கிற்று.
தன் எண்ணத்தின் பால் வீறும், பற்றும், திடமும் கொண்ட நாரையும் வாய்பெய்து கவ்வும் தன்மையை விடுத்து நீறும், புல்லும் உட்கொண்டு வாழ்ந்தது. இதுகாரும் தான் செய்த நோம்பினால் கரிகுருவிக்கு உபதேசித்த இறைவன் சொக்கநாதர் பெருமை அங்கிருந்த முனிவர் வாயிலாய் கேட்க கிட்டியது, இறைவன் செய்து வந்த லீலைகளை அவ்வேதியர் சொல்ல கேட்டது, நாரை.

தாமும் தம் குலமும் தழைத்தோங்க, அந்நாதனை பணிய முற்பட்டு, கடம்பவன க்ஷேத்திரத்தை அடைந்தது சிவந்த கால்களையும், பால் நிறம் கொண்ட அந்நாரை. அறியாமையை போக்கும் புண்ணிய பூமியாம், திருவாலவாயென்னும் இத்தலம் அகன்று நின்றமாடங்கள் நிறைந்த ஒப்பற்ற பதி. அஞ்ஞனம் வந்திருங்கிய நாரையானது வேழம் தாங்கிய விமனத்தை கண்டும், பொற்றாமரை கொண்ட குளத்தையும் கண்டு சிலிர்த்தது.

மூவைந்து தினங்கள் பொன் தாமரை தடாகத்தில் நிறாடி, சொக்கரையும், உமையாளையும் வலம் வந்து கொண்டிருந்த சமயம், தான் பிறவிப்பிணியினால் அக்குளத்து கயல்களின் பால் ஈர்த்து தன் பசியார நினைத்தது.

அச்சமயமே, ஈசன் கொண்ட திருவுள்ளத்தினால், தாம் எண்ணிய எண்ணத்தை வருந்தி ஈசனிடம் சிரம் தாழ்த்தி அவரடி தொழுதது. அவரடியில் இரு துணைமலரென்னும் தாமரையை வைத்து வணங்கியது. அதில் மகிழ்ந்த ஈசனாரும் அதன் முன் அது கேட்ட உருவில் தோண்றி “வேண்டும் வரம் இயம்புக” என்றார்.

இறைவனை தனெதிரில் கண்ட நாரையும், “ஈசனை தொழுது, சிவலோகத்தில் மேவி நான் உய்ய வேண்டும், மேலும், வள்ளலே இத்தாமரைக் குளம், மிகவும் புண்ணியக் குளம், இக்குளத்து கயல்களை யாதொரு எம்மரபினரும், பிற உயிரிகளும் உண்ண நேரிடின் சொல்லொன்னா பாவம் வந்து சேரும் ஆதலினால் இக்குளத்தில் நீர்வாழ்வாதார உயிரிகளற்று இருக்க கடவது,” என்று வேண்டினன்.

ஞாலத்து வெள்ளியை (நிலவை) தாங்கியவரும், ஆலவாய் வெள்ளியம்பல நாயகனுமான ஐயனும் “எஞ்ஞான்றும், இத்தடாகத்தில் மின்கள் இல்லையாகுமாறு” எனவும், அந்நாரைக்கு தன்கதி தரவும் அருளினான்.

ஐந்து துந்துபி வாத்தியங்கள் முழங்க, தேவ விமானத்தின் மீதேறி தாம் ஈசனிடத்தில் வேண்டிய சிவகதி அடைந்தது நாரை.

தனக்கு நற்கதி கேட்ட குருவிக்கு மந்திர உபதேசம் செய்து முக்திக்கு வழிகாட்டிய நாதன், தன் இனத்திற்க்கும், பிற இனத்திற்க்கும் நற்பெறும் படி செயலாற்றிய நாரைக்கு சிவலோக பதவியளித்தான்.

இன்றும் பொற்றாமைரை குளத்தில் மலர் இருக்கும், நீர்வாழ் தாவரங்கள் இருக்கும், ஆனால் மீனோ, புழுவோ! இருக்காது, ஆகவே மீனிற்க்கு பொறியிடும் வழக்கமும் இக்குளத்தில் இல்லை. இதுவும் ஆலவாயப்பனின் திருவிளையாடல்.

48வது திருவிளையாடலான நாரைக்கு முக்தியளித்த படலம் முடிந்தது.
சுபம்

Friday, August 29, 2008

குருவிக்கு உபதேசம் செய்த படலம் - கடைசி பகுதி

முதல் பகுதி





பாண்டிநாட்டில் “திருவாலவாயென்னும்” க்ஷேத்திரமுண்டு அதை தான் யாம் சொல்கிறோம்! என்று தொடர்ந்த முக்கியஸ்த்தன் மேலும் கூறலானான் "பேரன்பர்களே! உலகில் இந்த மூர்த்தியோ பெரும் கீர்த்தி பெற்றது, தீர்த்தமோ தங்கமயமானது! தலமோ தேவாதி தேவர்களும், ரிஷிமுனிகளும், வந்து வணங்கப்பெற்றது!. ஈசனின் மொத்த கருணையும் இத்தலத்திற்க்கு பாத்தியமுண்டு! வருணன் தாக்கிய நகரை கருணாமூர்த்தி காத்த தலம் இத்தலம்!”(தலம்) “நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று வதிட்ட கீரனின் தீப்புண் போக்கிய தீர்த்தம் இத்தீர்த்தம்” (தீர்ர்த்தம்) “பிரம்மஹத்தி தோஷம் தீர இந்திரன் வழிபட்ட மூர்த்தி இம்மூர்த்தி (மூர்த்தி)” ஆக மூர்த்தி தலம் தீர்த்தம் என்று எவ்வகை தொழவும், இறைசார் பிராத்தனையும் இங்கே இவ்விடத்து உண்டு, இத்தலம் வானவர் அனைவருக்கும் அளிக்கும் வரங்கள் பிறரும் அறியும் வண்ணம் அது உள்ளங்கை நெல்லியாம்! என முடிக்கவும் பொழுது பொல பொலவென விடியவும் சரியாக இருந்தது.

வழிப்போக்கர் அனைவரும் அங்கிருந்த தடாகத்தில் சந்தியா வந்தனம் செய்து, தத்தமது வழிபார்த்து செல்லலானர்!

இதுகாரும் ஆலமரதடியில் நடந்த உரையாடலைக் கேட்டபடி மரத்தில் இருந்த குருவி, தன் பிறவிபிணி தீரும் வழி பற்றி அறிந்து திருவாலவாயன் சன்னதி நோக்கி விரைந்தது.



தன் குறை தீர தினமும் பொற்றாமரை குளத்தில் நீறாடி, மீனாட்சி அம்மனையும், சொக்கநாதரையும் வலம் வந்து கொண்டிருந்தது!
இப்படியாக மூன்று தினங்கள் நடந்தேறியது.

அக்குருவியின் பக்தியின் சிரத்தையை மெச்சிய அன்னை அங்கயர்கண்ணி தன் கணவனிடத்தில் கேட்டாள்! ஐயனே! இக்குருவி வந்ததன் நோக்கம் யாது? இதுவும் தங்களது திருவிளையாடல் தானோ எனக் கேட்டது? ஈசனும் தன் இமையாத மூன்று கண்களாலும் கருணைப் பார்வை பொழிந்து, பசிக்கு தவிக்கும் கண்றுக்கு பாலுட்டும் ஆவினை போல் ஆலவாயப்பனும் அக்குருவிக்கு சத்தியஞான மந்திரமாம், மரணத்தை வெல்லும் மந்திரமாம், மஹா மிருத்துஞ்சய மந்திரத்தை உபதேசித்தருளினார்.


ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்தனம்
உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர்முக்ஷீ ய மாம்ருதாத்
(மஹா நாராயண உபநிஷதம் 56-1)

மந்திரத்தின் பொருள்:
முக்கண்ணனை நான் வணங்குகிறேன். நறுமணம் மிக்கவன் அவன். நம் ஆரோக்கியத்தை (புஷ்டியை) வளர்ப்பவன் அவன். மரணத்தின் பிடியிலிருந்து என்னை விடுவித்து மரணமிலா பெருவாழ்வை தர அவனை வேண்டுகிறேன்.
(மந்திரத்தின் பொருள் உபயம் குமரன் - ஞானம் ஐயா அவர்களுது பதிவிலிருந்து)

பயம் என்பது ஒரு மனிதனை தன்நிலையிலிருந்து கீழே இட்டுவரக்கூடியது அப்பேற்பட்ட பயத்திற்க்கெல்லாம் பெரிய பயம் மரணபயம். மரணத்திற்க்கு அதிபதியான காலனையே பயங்கொள்ள செய்தது இந்த மரணபயம். அத்தகைய பயத்தை போக்க இம்மந்திரம் சொக்கநாதர் அக்கரிகுருவிக்கு உபதேசித்தார்.
உபதேசம் பெற்ற குருவியோ மிகவும் அகமகிழ்ந்து! ஈசனை போற்றி பாட ஆரம்பித்ததது

எண் இலா உயிர்க்கு இறைவ போற்றி
வான் தண் நிலா மதிச் சடில போற்றி
என் புண்ணியப் பயன் போற்றி
அமால் கயல் கண்ணி நாத நின் கருணை போற்றி.

இவ்வாறாக போற்றிபாடி இறைவனிடம் தன் குறை சொல்லியது அக்குருவி!
“இறைவா! தெளிவில்லாத மனதால் செய்த தீவினையால் இக்கதி அடைந்த என்னை ஆட்கொள்ள வேண்டும்!’ ’தம்மை ஆட்கொள்வதோடு தன் இனத்திற்க்கு எவ்வித கேடும் இன்றி இவ்வுலகில் வலம் வர வரம் நல்க வேண்டும். தம் இனத்தவர் யாவரும், எங்கும் எச்சமயத்திலும் பறந்து செல்ல வேண்டும்!’ “அங்ஙனமே நீர் எமக்கு உபதேசித்த மூவோசை கொண்ட மந்திரத்தை உறைப்பவர் தம் மரண பயத்தை போக்கி தீர்க்காயுளும் அருளவேண்டும்” என்றது.

“அவ்வாறே ஆகுக” என்ற காருண்யமூர்த்தி அக்குருவி செய்த செய்கையாலும் தன் இனத்திற்க்கே வலியை போக்கிய தன்மையாலும், இவ்வுலக பயத்தையும் போக்கு வண்ணம் வரம் கேட்ட தன்மையாலும், இஞ்ஞாலம் அதனை “வலியான்” என போற்றும் என்று அருளி மறைந்தார்!

மூவெழுத்தினால் முடிந்த மந்திரம் என்று திருவிளையாடல் புராணம் மிருத்துஞ்சய மந்திரத்தை போற்றுகிறது அதாவது, இந்த மந்திரமானது தெய்வம், இருடி, சந்தம் என்று முடிவதால் இதனை மூவெழுத்தினால் ஆன மந்திரம் என்கிறது. இதை உதாத்தம், அநுதாத்தம், சொரிதம் என்று வடமொழி இயம்புகிறது.

இம் மது ரேசன் சேவித்து ஏத்து வோர்க்கு எளியன் ஆகிக்
கைம் மலர் நெல்லி போலக் கருதிய வரங்கள் எல்லாம்
இம்மையின் உடனே நல்கும் ஏனைய தலத்து வானோர்
அம் மையின் அன்றி நல்கார் ஆதலால் அதிகன் என்றான். 8

மற்று அது கேட்டுக் கொம்பர் வைகிய கயவாய் ஞானம்
பெற்றது பறவை ஆகிப் பிறந்ததும் பிறவும் தேற்றம்
உற்றது நாம் இச் சன்மம் ஒழிப்பதற்கு அறவோன் இங்ஙன்
சொற்றதே உறுதி என்று துணிவு கொண்டு எழுந்தது அன்றே. 9

ஆய் மலர்க் கான நீங்கி ஆடக மாடக் கூடல்
போய் மலர்க் கனக கஞ்சப் புண்ணியப் புனல் தோய்ந்து ஆம்பல்
வாய் மலர்க் கயல் உண் கண்ணாள் மணாளனை வலம் செய்து அன்பில்
தோய் மலர் கழல் இனானை அகத்தினால் தொழுது அர்ச்சித்தே. 10

இன்னணம் மூன்று வைகல் கழிந்தபின் எம்பிராட்டி
தன் அமர் காதலானைத் தாழ்ந்து எதிர் நோக்கி ஐய
என்னைக் இக் கயவாய் செய்யும் செயல் இதன் வரவு யாது என்ன
முன்னவன் அதன் தன் செய்தி வரவு எலாம் முறையால் கூறா. 11

பத்திமை நியமம் பூண்ட பறவை மேல் கருணை நாட்டம்
வைத்து இமையாத முக்கண் மறை முதல் ஒரு சேய்க் கன்று
நித்திய நிலைமை நல்கி நேர்ந்த வெம் கூற்றைக் காய்ந்த
சத்திய ஞான மிருத்திஞ்சயத்தினை உபதேசித்தான். 12

உவமை அற்றவன் உரைத்த மந்திரம்
செவி மடுத்தலும் சிற்றுணர்ச்சிபோய்ப்
பவம் அகற்றிடப் படுக் கரிக் குரீஇ
கவலை விட்டரன் கழல் வழுத்தும் ஆல். 13

எண் இலா உயிர்க்கு இறைவ போற்றி வான்
தண் நிலா மதிச் சடில போற்றி என்
புண்ணியப் பயன் போற்றி அம் கயல்
கண்ணி நாத நின் கருணை போற்றி ஆல். 14

தெளிதல் இன்றியே செய்த தீமையால்
விளியும் என்னையும் ஆளல் வேண்டுமோ
எளியர் எங்கு உளார் என்று தேர்ந்து தேர்ந்து
அளியை ஆவது உன் அருளின் வண்ணமே. 15

உம்மை நல் அறம் உடைய நீர்மையால்
இம்மை இம் மனு இயம்பினாய் இது
அம்மை நல் நெறிக்கு ஏது ஆதலான்
மும்மையும் நலம் உடைய மொய்ம்பினேன். 16

ஆயினும் எனக்கு ஐய ஓர் குறை
தீய புள் எலாம் ஊறு செய்து எனைக்
காயும் மனமும் கழியக் கண்ட பேர்
ஏ எனும் படிக்கு எளியன் ஆயினேன். 17

என்ன அக் குரீ இயம்ப எம்பிரான்
அன்ன புட்கு எலாம் வலியை ஆகெனப்
பின்னும் அக் குரீஇ தாழ்ந்து பேதை யேற்கு
இன்னும் ஓர் வரந் தருதி என்றதால். 18

வலியை என்பது என் மரபினுக்கு எலாம்
பொலிய வேண்டும் எப்போதும் நீ சொன
ஒலிய மந்திரம் ஓதி ஓதி நாங்
கலியை வெல்லவும் கருணை செய்கென. 19

ஆவது ஆக என்று அமரர் நாயகன்
மூ எழுத்தினான் முடிந்த அம்மனு
தாவி தெய்வதம் இருடி சந்தமோடு
ஓவில் ஓசை மூன்று ஒடு தெருட்டினான். 20

குரு மொழி பயின்று முள் வாய்க் குருவி தன் குலனும் தன் போல்
அரு மறை முதல்வன் ஈந்த ஆற்றலால் பறவைக்கு எல்லாம்
பெருமை சால் வலியான் என்னும் பெயரவாய் உலகின் மன்னக்
கருமணி கண்டன் செம்பொன் கனை கழல் அடி சேர்ந்த அன்றே. 21

இக்கரிக் குருவி தான் நோற்று எய்திய வரத்தைத் தன் போல்
ஒக்கலும் எளிதாய் எய்தப் பெற்றதால் உலகின் மேன்மை
தக்கன் ஒருவன் வாழத் தன் கிளை வாழ்வது என்ன
மிக்கவர் எடுத்துக் கூறும் பழமொழி விளக்கிற்று அன்றே. 22

ஈசன் அடிக்கு அன்பு இல்லார் போல் எளியார் இல்லை யாவர்க்கும்
ஈசன் அடிக்கு அன்பு உடையார் போல் வலியார் இல்லை யாவர்க்கும்
ஈசன் அடிக்கு அன்பு இன்மையினால் எளிதாய் திரிந்த இக் கயவாய் ஈசன் அடிக்கு அன்பு உடைமையினால் வலிது ஆயிற்றே எவ்வுயிர்க்கும். 23

குருவிக்கு உபதேசம் செய்த படலம்





ஒருவன் எவ்வளவு தான் தான தர்மங்கள் செய்தாலும், தவறு என்று ஏதேனும் செய்துவிட்டாலும் அதற்க்கான பலனை இந்த உலகில் வந்து அனுபவித்த பிறகே மேலுலக வாசம் கிட்டும் அப்படி ஏற்பட்ட ஒரு சூழலில் தான் இந்த குருவிக்கு உபதேசம் செய்த லீலையாக சொல்லப்படுகிறது.

பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணத்தில் 47வது திருவிளையாடலாக கரிகுருவிக்கு உபதேசம் செய்த படலம் வருகிறது.

இதன் மூலம் தவறு செய்தவன் தன் தவற்றை உணர்ந்து, தன்னை திருத்திக்கொண்டால் பல அளர்பரிய காரியங்களை செய்யமுடியும் என்று விளங்க செய்கிறது இந்த படலம்.

தான் செய்த சில காரியங்களுக்காக ஒரு தர்மவான் குருவியாக பிறக்கிறார். குருவியானது உணவு தானியம் விழும் சத்தம் கேட்டாலும் பயந்து போய் கண் காணாத இடத்திற்க்கு கணநேரத்தில் பறந்து விடும் தன்மை கொண்டது. தன்னுடைய நிலையால் மிகவும் வேதனையடைந்த குருவி காட்டுப்பகுதியில் வாழ்ந்து வந்தது. அச்சமயம் ஒரு சில வழிப்போக்கர்கள். எவ்வாறு உலக பந்தத்திலிருந்து விடுபடுவது என்று விவாதித்து கொண்டிருந்தனர், அவற்றை மரத்திலிருந்தபடியே கவனமாக கேட்டது அக்குருவி.


வழிப்போக்கர்களின் முக்கியமானவன் பேச ஆரம்பித்தான்.

ஆன்மீக அன்பர்களே! இவ்வுலகில் செய்த கர்மவினைகளை எவ்வாறு போக்குவது என்று நாம் அறிந்த வழிமுறைகளை சொல்லி விவாதிக்கலாம் என்று இறைவன் திருவுள்ளம் கொண்டுள்ளான், தாங்களின் மொழிகாணா விழைகிறேன் என்றான்

வேடுவ தலைவன் என்று தன்னை அறிமுகம் செய்தவன் முதலில் ஆரம்பித்தான்! "இறையன்பர்களே! நான் கடந்து வந்த பாதையில் ப்ல பாவங்கள் செய்து விட்டேன் அதிலிருந்து விடுபட என்ன செய்ய என்று கேட்டதற்க்கு தீர்த்தமாடினால் முக்தி என்றார், அதுவும் பல ஆறுகள் கலக்கும் மூன்று ஆறுகளில் நிராடினால் நிச்சயம் முக்தி எனக்கூறானார், காட்டில் வாழும் தவசி ஒருவர், அவ்வாறே காவிரி பட்டிணம், மீனாட்சி பட்டிணம், வேணுவனம் ஆகிய க்ஷேத்திரங்களுக்குச் சென்று, காவிரி புண்ணிய நீறாடி பாவம் போக்கி வருகிறேன்" என்றார். "செய்த கர்மங்களை தீர்க்க தீர்த்தமாடுதல் புண்ணியம் என்றார் வேடுவ தலைவன்"

பிறகு தன்னை வணிகன் என்று அறிமுகபடுத்திக் கொண்ட ஒருவன் தொடர்ந்தான்
"ஆன்றோர்களே! வணிகத்தில் பல குளருபடிகளால் சிற்சில பாவங்கள் என்னையும் அடைந்தன அதனை போக்கி கொள்ள, பல தலங்களை அடைந்து சென்று க்ஷேத்திரங்களை தரிசித்து வர செய்த பாவம் தொலையும் என்றார் என் குருநாதர், அதன்படி எல்லா வல சர்வேசனை அவர் கோயில் கொண்டுள்ள 274 தலங்களை வணங்க்கி வழிபட்டு வருகிறேன், செய்த பாவங்கள் தொலைய க்ஷேத்திராடதனம் மிக மிக அவசியம். தன்னை அடைந்தவர்க்கு என்றும் நலனையே அளிக்கும் ஈசனை வணங்கினால் அதனினும் புண்ணியம் உலகில் இல்லை என்றான் வணிகன்.

முக்கியமானவன் இப்போது பேச ஆரம்பித்தான் "சீலர்களே! ஆக தாங்கள் சொன்னதன் படி பார்த்தால் மூர்த்தி, தலம், தீர்த்தம் சென்றாடினால் மிகவும் புண்ணியம் என்கிறீர்கள்! சரிதானே?" என கேட்டவுடன் எல்லோரும் அமோதிக்க "அப்பேற்பட்ட ஒரு சக்தி வாய்ந்த தலமாக எது என சொல்வீரா?" எனக்கேட்டான் முக்கியஸ்த்தன்.

அனைவரும் திகைத்தனர்.

க்ஷேத்திராடதனம் (தலம்) செய்தால் நன்மை பயக்கும், (மூர்த்தி)இறைவழிபாடால் புண்ணியம் கிட்டும், (தீர்த்தம்)தீர்த்தம் ஆடினால் பாவம் தொலையும் இம்மூன்றும் அடைய பாரினில் பல இடங்களுக்கு செல்ல வேண்டும்! எவ்வாறு ஒரே ஒரு சக்தி வாய்ந்த தலம் என்று எவ்வாறு சொல்ல முடியும் எனக்கேட்டனர்! அவ்வாண்றோர்கள்!

ஆற்றல் சால் ஒருவன் மேல் நாள் ஆற்றவும் அறனே ஆற்றி
மாற்றம் இல் சிறிது பாவம் செய்த தன் வலத்தால் வந்து
தேற்றம் இல் கயவாய் ஆகிச் செனித்தலால் காகம் ஆதி
கூற்று என ஊற்றம் செய்யக் குருதி சோர் தலையது ஆகி.

(திருவிளையாடற் புராணம், 2276, 47வது திருவிளையாடல், கரிகுருவிக்கு உபதேசம் செய்த படலம், பாடல். 3)

புட்கு எல்லாம் எளிதா ஊறு பாடு அஞ்சிப் புரத்துள் வைகி
உட்கி நீள் வனத்துள் போகி வழி மருங்கு ஒரு சார் நிற்கும்
கட்கு அவிழ்ந்து ஒழுகப் பூத்த கவிழ் இணர் மரம் மேல் வைகி
வெட்கம் மீதூரச் சாம்பி வெய்து உயிர்த்து இருக்கும் எல்லை.


(திருவிளையாடற் புராணம், 2277, 47வது திருவிளையாடல், கரிகுருவிக்கு உபதேசம் செய்த படலம், பாடல். 4)

விடையவன் நீறு பூசும் மெய்யவன் பூண்ட கண்டித்
தொடையவன் புறம்பும் உள்ளும் தூயவன் குடையும் கையில்
உடையவன் தரும தீர்த்த யாத்திரை ஒழுக்கம் பூண்ட
நடையவன் ஒருவன் அந்த நறும் தரு நிழலில் சார்ந்தான்.



(திருவிளையாடற் புராணம், 2278, 47வது திருவிளையாடல், கரிகுருவிக்கு உபதேசம் செய்த படலம், பாடல். 5)

இருந்தவன் சிலரை நோக்கி இயம்புவான் எர்க்கும் பேறு
தரும் தலம் தீர்த்தம் மூர்த்தித் தன்மையில் சிறந்த அன்பு
அரும் தமிழ் மதுரை பொன் தாமரைத் தடம் சுந்தரேசப்
பெரும் தகை என்று சான்றோர் பேசுவார் ஆதலாலே.


(திருவிளையாடற் புராணம், 2279, 47வது திருவிளையாடல், கரிகுருவிக்கு உபதேசம் செய்த படலம், பாடல். 6)

ஓர் இடத்து இனைய மூன்று விழுப்பமும் உள்ளது ஆகப்
பார் இடத்து இல்லை ஏனை பதி இடத்து ஒன்றே என்றும்
சிர் உடைத்து ஆகும் கூடல் செழும் நகர் இடத்தும் மூன்றும்
பேர் உடைத்து ஆகும் என்றால் பிறிது ஒரு பதி யாது என்றான்.


(திருவிளையாடற் புராணம், 2280, 47வது திருவிளையாடல், கரிகுருவிக்கு உபதேசம் செய்த படலம், பாடல். 7)

தொடரும்

Wednesday, August 27, 2008

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணிமூல உற்சவம் (புட்டுத்திருவிழா)

மதுரை, ஆக.27-

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூல திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அடுத்த மாதம் 8-ந் தேதி சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.

ஆவணி மூல உற்சவ விழா

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவிற்கு அடுத்து மிகப்பெரிய திருவிழா ஆவணிமூல விழாவாகும். குறிப்பாக மதுரையில் சிவபெருமானின் ஆட்சி இந்த மாதத்தில் இருந்து தான் தொடங்குகிறது. இந்த ஆவணி மூல திருவிழா இன்று (27-ந் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மொத்தம் 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரர் சுவாமியும் பல்வேறு வாகனங்களில் ஆவணி மூல வீதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள்.

அதன்படி வருகிற ஆகஸ்ட் - 2-ந்தேதி, `கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை` கோவிலுக்குள் உள்ள குலாலர் மண்டபத்தில் நடைபெறும். 3-ந் தேதி, `நாரைக்கு முக்தி கொடுத்த லீலை` பூக்கடைத்தெருவில் உள்ள முத்துச்செட்டியார் மண்படத்திலும், 4-ந் தேதி `மாணிக்கம் விற்ற லீலை`யும், 5-ந் தேதி, `தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை`யும், 6-ந் தேதி, `உலாவாக்கோட்டை அருளிய லீலை`யும், 7-ந் தேதி `பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை`யும் நடக்கிறது.

பட்டாபிஷேகம்

8-ந் தேதி முக்கிய விழாவான பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று இரவு 7-33 முதல் 7-57 மணிக்குள் சுவாமி சன்னதியில் உள்ள ஆறுகால் பீடத்தில் சுந்தரேஸ்வருக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த விழாவில் அறங்காவலர் குழுத்தலைவர் கருமுத்து.கண்ணன், சுவாமியிடம் இருந்து செங்கோலை பெற்றுக்கொண்டு அவரின் சார்பில் சுவாமி சன்னதி 2-ம் பிரகாரம் சுற்றி வந்து, மறுபடியும் சுவாமியிடம் செங்கோலை ஒப்படைக்கிறார்.

9-ந் தேதி, `நரியை பரியாக்கிய லீலை`, 10-ந் தேதி மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் உள்ள புட்டுத்தோப்பு மண்டபத்தில், `பிட்டுக்கு மண் சுமந்த லீலை`யும் நடக்கிறது. 11-ந் தேதி, `விறகு விற்ற லீலை`யும் நடக்கிறது. 12-ந் தேதி அம்மனும், சுவாமியும் சட்டத்தேரில் ஆவணி மூலவீதியில் எழுந்தருளுகிறார்கள்.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ராஜநாயகம், கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் கருமுத்து கண்ணன், அறங்காவலர்கள் ருக்மணி பழனிவேல்ராஜன், ராஜாராம், புகழகிரி, பாலசுப்பிரமணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

செய்தி : தினத்தந்தி

அட்டவணை
செப்- 2-ந்தேதி, `கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை` கோவிலுக்குள் உள்ள குலாலர் மண்டபத்தில் நடைபெறும்.

செப் 3-ந் தேதி, `நாரைக்கு முக்தி கொடுத்த லீலை` பூக்கடைத்தெருவில் உள்ள முத்துச்செட்டியார் மண்படத்திலும்,

செப்- 4-ந் தேதி `மாணிக்கம் விற்ற லீலை`யும்,

செப் - 5-ந் தேதி, `தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை`யும்,

செப் - 6-ந் தேதி, `உலாவாக்கோட்டை அருளிய லீலை`யும்,

செப் - 7-ந் தேதி `பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை`யும் நடக்கிறது.

செப் - 8-ந் தேதி `வளையல் விற்ற லீலை` யும்

செப் - 9-ந் தேதி, `நரியை பரியாக்கிய லீலை`, யும்

செப் - 10-ந் தேதி மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் உள்ள புட்டுத்தோப்பு மண்டபத்தில், `பிட்டுக்கு மண் சுமந்த லீலை`யும் நடக்கிறது.

செப் - 11-ந் தேதி, `விறகு விற்ற லீலை`யும் நடக்கிறது.

செப் - 12-ந் தேதி அம்மனும், சுவாமியும் சட்டத்தேரில் ஆவணி மூலவீதியில் எழுந்தருளுகிறார்கள்.

//முக்கிய விழாவான பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று இரவு 7-33 முதல் 7-57 மணிக்குள் சுவாமி சன்னதியில் உள்ள ஆறுகால் பீடத்தில் சுந்தரேஸ்வருக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த விழாவில் அறங்காவலர் குழுத்தலைவர் கருமுத்து.கண்ணன், சுவாமியிடம் இருந்து செங்கோலை பெற்றுக்கொண்டு அவரின் சார்பில் சுவாமி சன்னதி 2-ம் பிரகாரம் சுற்றி வந்து, மறுபடியும் சுவாமியிடம் செங்கோலை ஒப்படைக்கிறார். //

Tuesday, August 26, 2008

ஆவணி திருவிழா ஆரம்பம்



நாளை முதல் ஆவணி திருவிழா இனிதே ஆரம்பம்!

Monday, August 25, 2008

மீனாட்சி அம்மன் கோவில் படங்கள் அனைத்தும் ஒரே தளத்தில்

மீனாட்சி அம்மன் கோவில் படங்கள்


அனைவருக்கும் வணக்கம், மீனாட்சி அம்மன் கோவில் படங்கள் 250 படங்களையும் ஒரே தளத்தில் காண செய்ய முடியுமா என வலைச்சர பொறுப்பாசிரியர் திரு.சீனா அவர்கள் கடந்த மதுரை சந்திப்பின் போது கேட்டார்.

முயல்கிறேன் என்று கூறி விடைபெற்றேன்.

முயன்றேன் - முடிந்து. மேலிருக்கும் அம்மன் படத்தை சொடிக்கினால் எல்லா படங்களை பிக்காஸா தளத்தில் காணலாம், நீங்களும் தங்களது தளத்தில் இதன் ஸ்லைடு ஷோ - வாக காட்டலாம்.

Slide show gadget-ல் picasaweb என்பதை தேர்ந்தெடுத்து sivamurugan.neelamegam என்ற என்னுடைய மின்னஞ்சல் முகவரியை இட்டால், அதிலிருக்கும் "Meenakshi Temple", என்ற ஆல்பத்தை தேர்ந்தெடுத்தால் நீங்களும் உங்கள் தளத்தில் இடலாம்.